மத்திய மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு; நாசிக் சந்தைகளில் வெங்காய ஏலம் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது

மத்திய மந்திரி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நாசிக் சந்தைகளில் வெங்காய ஏலம் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

Update: 2023-08-23 19:00 GMT

நாசிக், 

மத்திய மந்திரி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து நாசிக் சந்தைகளில் வெங்காய ஏலம் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

ஏலம் நிறுத்தம்

தக்காளியின் விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்தது. இதைதொடர்ந்து வெங்காயத்தின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக ஏற்றுமதியை கட்டுப்படுத்த ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக அதிகரித்தது. இது வெங்காய வியாபாரிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக்கில் உள்ள ஏ.பி.எம்.சி சந்தைகளில் வெங்காய ஏலம் நிறுத்தப்பட்டது. விவசாயிகளும் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 3 மூன்று நாட்களாக வெங்காய ஏலம் நடக்காத நிலையில் வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி டாக்டர் பாரதி பவார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நாசிக் வெங்காய வியாபாரிகள் சங்க தலைவர் கந்து தியோரே கூறியதாவது:-

இன்று முதல் மீண்டும் ஏலம்

வெங்காயத்தின் மீது வரியை விதிக்கும்போது மத்திய அரசு வணிகர்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே எங்களின் நியாயமான கோரிக்கை. விவசாயிகளுக்கு வியாபாரிகள் தடைகளை உருவாக்குவதில்லை. வணிகர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளார். இதனால் எங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு நாளை (இன்று) முதல் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. சந்தைகளில் ஏலத்தை தொடங்க உள்ளோம். விவசாயிகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மத்திய மந்திரி பாரதி பவார் கூறுகையில், " விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்றுமதி வரியை அதிகரித்தது. ஏற்றுமதி வரி குறித்து, மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்