18 நோயாளிகள் பலியான சம்பவத்தை அடுத்து தானே ஆஸ்பத்திரி தூய்மை பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு; மாநகராட்சி அறிவிப்பு

18 நோயாளிகள் இறந்த சம்பவத்தை அடுத்து தானே மாநகராட்சி ஆஸ்பத்திரி தூய்மை பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-09-13 19:30 GMT

தானே, 

18 நோயாளிகள் இறந்த சம்பவத்தை அடுத்து தானே மாநகராட்சி ஆஸ்பத்திரி தூய்மை பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

18 நோயாளிகள் பலி

தானே, கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளுக்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் இறந்தனர். சிறுநீரக கல், நாள்பட்ட பக்கவாதம், அல்சர், நிமோனியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளானவர்கள் இதில் அடங்குவர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 9 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியின் தூய்மை பணியை தானே மாநகராட்சி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

24 மணி நேரமும் பணி

ஆஸ்பத்திரி மற்றும் அதன் வளாகம், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தூய்மையை பராமரிக்க, துப்புரவு எந்திரங்களை இந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் பயன்படுத்துவார்கள். புதிய தூய்மை ஒப்பந்ததாரர் நியமனம் ஆஸ்பத்திரி மற்றும் அதன் வளாகத்தின் பராமரிப்பில் தீவிர மாற்றங்களை கொண்டுவரும். மொத்தம் 180 பணியாளர்கள் 24 மணி நேரமும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். கழிவறை பராமரிப்புக்காக சில நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒப்பந்தத்தில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற அலட்சியத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்