மும்பையில் ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த பருவமழை- வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

மும்பையில் ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த பருவமழையால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-09-07 18:45 GMT

மும்பை, 

மும்பையில் ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த பருவமழையால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பருவ மழை

மும்பையில் நடப்பாண்டு பருவ மழைக்காலம் தாமதமாகவே தொடங்கியது. எனினும் ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்தது. கடந்த மாதம் நகாில் மழை பொய்த்து போனது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 100 சதவீதத்தை அடையவில்லை. தற்போது ஏரிகளில் 91 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது. பருவமழை காலம் என்றாலும் கடந்த மாதம் மழை பெரிய அளவில் பெய்யவில்லை.

எனவே நகரில் குடிநீர் வினியோகத்தை 10 சதவீதம் அளவுக்கு குறைப்பது குறித்து அக்டோபர் மாதம் முடிவு எடுப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

திடீரென மழை பெய்தது

இந்தநிலையில் நேற்று நகரில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகரில் வெப்பம் தணிந்து, குளிர்ந்த வானிலை நிலவியது. கிழக்கு புறநகரில் 8.11 மி.மீ., மேற்கு புறநகரில் 15.87 மி.மீ. மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மும்பையில் பலத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மும்பை நகருக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி ஆகிய பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்