நடிகை ஐஸ்வர்யா ராய் கண்கள் குறித்த சர்ச்சை கருத்து: மந்திரி விஜய்குமார் காவித் வருத்தம் தெரிவித்தார்

நடிகை ஜஸ்வர்யா ராய் கண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மந்திரி விஜய்குமார் காவித் வருத்தம் தெரிவித்ததாக மாநில மகளிர் ஆணையம் கூறியுள்ளது.

Update: 2023-08-30 19:15 GMT

மும்பை, 

நடிகை ஜஸ்வர்யா ராய் கண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு மந்திரி விஜய்குமார் காவித் வருத்தம் தெரிவித்ததாக மாநில மகளிர் ஆணையம் கூறியுள்ளது.

அழகான கண்கள்

பா.ஜனதாவை சேர்ந்தவரும், மாநில பழங்குடியினர் நலத்துறை மந்திரியுமான விஜய்குமார் காவித் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதில் அவர், "தினமும் மீன் சாப்பிடுபவர்களுக்கு சருமம் மிருதுவாகும், கண்கள் மிளிரும். யாராவது உங்களை பார்த்தால் அந்த நபர் ஈர்க்கப்படுவார். நடிகை ஐஸ்வர்யா ராய் மங்களூரு கடலோர பகுதியில் வசித்தவர். அவர் தினமும் மீன் சாப்பிடுகிறார். அவரது அழகான கண்களை போன்று உங்கள் கண்களும் மாறிவிடும். மீனில் சில எண்ணெய் சத்துகள் உள்ளன. அது உங்கள் சருமத்தை மிருதுவாக்கும்" என்று பேசினார். இவரின் இந்த பேச்சு சர்ச்சைக்கு வித்திட்டது. எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் மந்திரி விஜய்குமார் காவித்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ளார். இந்தநிலையில் மாநில மகளிர் ஆணைய குழு தலைவரான ரூபாலி சகங்கர், மந்திரி அளித்த பதில் குறித்து தனது வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

தவறான சித்தரிப்பு

மாநில மகளிர் ஆணையத்திற்கு மந்திரி விஜய்குமார் காவித் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தனது கருத்துகள் எந்த ஒரு பெண்ணையும் அவமதித்திருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் தான் உள்ளூர் பேச்சு வழக்கில் பேசியதாகவும், ஆனால் செய்தி சேனல்கள் தனது கருத்துகளை வேறு விதமாக சித்தரித்து வெளியிட்டு விட்டதாக கூறியுள்ளார். தன் வாழ்நாளில் பெண்களுக்கு எதிராக எந்த அவமானகரமான கருத்துக்களையும் பேசியதில்லை என்றும் மந்திரி பதில் அளித்திருக்கிறார். இவ்வாறு ரூபாலி சகங்கர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்