நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனருடன் திடீர் சந்திப்பு

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அடுத்து மும்பை போலீஸ் கமிஷனரை நடிகர் சல்மான்கான் சந்தித்து பேசினார்.;

Update:2022-07-22 23:28 IST

மும்பை, 

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அடுத்து மும்பை போலீஸ் கமிஷனரை நடிகர் சல்மான்கான் சந்தித்து பேசினார்.

சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது.

சல்மான் கான் 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தபோது, அங்குள்ள காட்டில் அரியவகை மான்களை அவர் சுட்டுக்கொன்று வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த அரியவகை மான் பிஷ்னோய் சமுதாயத்தின் புனித விலங்காக கருதப்படுவதால், அவருக்கு பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கமிஷனருடன் சந்திப்பு

இந்தநிலையில் இன்று மாலை நடிகர் சல்மான்கான் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கரை அவரது அலுவலகத்தில் திடீரென சந்தித்து பேசினார். இதேபோல சட்டம்- ஒழுங்கு இணை கமிஷனர் விஸ்வாஸ் நாங்ரேவையும் சந்தித்து பேசினார். நடிகர் சல்மான்கான் மரியாதை நிமித்தமாகவே போலீஸ் கமிஷனரை சந்தித்ததாகவும், வேறு காரணங்கள் எதுவுமில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இருப்பினும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு அவர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்