2 வழக்குகளில் நடிகர் கமல் கானுக்கு ஜாமீன்
2 வழக்குகளில் நடிகர் கமல்கானுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
2 வழக்குகளில் நடிகர் கமல்கானுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
நடிகை புகார்
இந்தி நடிகர் கமல் கான் மீது கடந்த 2021-ம் ஆண்டு 27 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார்.
இவர் தனது புகாரில், "நடிகர் கமல்கான் தன்னை ஒரு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதாக உறுதியளித்தார். இதற்காக பேசவேண்டும் என்று கூறி வெர்சோவா பகுதியில் உள்ள அவரது பங்களாவுக்கு என்னை அழைத்தார். அப்போது குடிபோதையில் இருந்த அவர் என்னை தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் காவல்
இதற்கிடையே நடிகர் அக்ஷய் குமார் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா குறித்த மோசமான டுவிட்டர் பதிவு தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போலீசார் கமல் கானை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை பெண் கொடுத்த வழக்கின் அடிப்படையில் வன்கொடுமை வழக்கில் வெர்சோவா போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்தனர்.
ஜாமீன்
இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்தநிலையில் அக்ஷய் குமார் குறித்த டுவிட்டர் பதிவு குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் கான் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் இவரின் கருத்துகள் "லஷ்மி பாம்" என்ற படம் தொடர்பானதே தவிர தனிப்பட்ட முறையில் அவர் எதையும் கூறவில்லை என வாதாடினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.