ஷாருக்கான் மகனை வழக்கில் சிக்க வைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை- நிதியமைச்சகத்துக்கு, மத்திய அரசு உத்தரவு

ஷாருக்கான் மகனை வழக்கில் சிக்க வைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சகத்துக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-27 14:27 GMT

மும்பை, 

இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்தநிலையில் தான் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போதைய மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையை எடுத்தார். ஆனால் தற்போது ஆர்யன் கான் குற்றமற்றவர் என்று கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விசாரணையில் நடந்த தவறுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைவர் எஸ்.என். பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆர்யன் கான் பிடிபட்டதும், அவரை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.25 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து இருந்தது. அவர் ஆர்யன் கானை வேண்டுமென்றே போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்ததாக கூறப்படுகிறது. எனவே தரக்குறைவான விசாரணைக்காக சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. சமீர் வான்கடே ஐ.ஆர்.எஸ். அதிகாரி என்பதால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நிதியமைச்சகத்துக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சமீர் வான்கடே போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த குற்றசாட்டும் எழுந்தது. இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சமீர் வான்கடே மராத்தி நடிகை கிராந்தி ரெட்கரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

மேலும் செய்திகள்