குண்டும், குழியுமான கோட்பந்தர் சாலையில் விபத்து; எலக்ட்ரீசியன் பலி

குண்டும் குழியுமான கோட்பந்தர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன் பலியானார்.

Update: 2022-07-06 17:37 GMT

தானே, 

குண்டும் குழியுமான கோட்பந்தர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன் பலியானார்.

கீழே விழுந்தார்

தானே மும்ராவை சேர்ந்தவர் மோனிஷ்கான் (வயது37). எலக்ட்ரீசியனான இவர், மும்பைக்கு வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். தானே கோட்பந்தர் சாலை காஜூபாடா அருகே வந்த போது மழையின் காரணமாக அப்பகுதி சாலையில் பள்ளம் கிடந்தது.

இதனை கவனிக்காததால் பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி மோனிஷ்கான் கீழே விழுந்தார். அப்போது போரிவிலி நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து அவர் உயிருக்கு போராடினார்.

விபத்து நடந்த உடனே பஸ் டிரைவர் இறங்கி அங்கிருந்து தப்பிஓடி விட்டார். இதனால் நடுவழியில் பயணிகளுடன் பஸ் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எலக்ட்ரீசியன் பலி

இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மோனிஷ்கானை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிசென்ற பஸ் டிரைவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தானே மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்த தற்போதைய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குண்டு குழியுமாக கிடந்த சாலையில் சரிவர பணியை மேற்கொள்ளாத மாநகராட்சி என்ஜினீயரை பணி இடைநீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்