பைகுல்லா ரெயில் நிலையத்தில் பரபரப்பு அடுத்தடுத்து ரெயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசாரின் முயற்சியால் உயிர் தப்பினார்
பைகுல்லா ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து ரெயில் முன்பு குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டு காப்பாற்றினர்.;
மும்பை,
பைகுல்லா ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து ரெயில் முன்பு குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டு காப்பாற்றினர்.
தற்கொலை முயற்சி
மும்பை மத்திய ரெயில்வே பைகுல்லா ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை 5.55 மணி அளவில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நடந்து சென்றாள். அப்போது அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் வந்தது. பெண் நடந்து சென்றதை கண்ட மோட்டார் மேன் ஹாரனை அழுத்தி உள்ளார். ஆனால் அப்பெண் தண்டவாளத்தை விட்டு நகராமல் நடந்து சென்றதை பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள் கண்டு சத்தம் போட்டனர்.
அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் விரைந்து சென்று ரெயில் மோத விடாமல் அப்பெண்ணை தண்டவாளத்தை விட்டு நகர்த்தி காப்பாற்றி 1-ம் நம்பர் பிளாட்பாரத்திற்கு அழைத்து வந்தார். அப்போது திடீரென அப்பெண் போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து ஓடினார்.
திருமணத்திற்கு மறுப்பு
பின்னர் மீண்டும் தண்டவாளத்தில் குதித்து சி.எஸ்.எம்.டி நோக்கி சென்ற மின்சார ரெயில் முன்பு நின்றார். இதனை கண்ட மோட்டார் மேன் அவசர பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக ரெயில் அப்பெண்ணின் மீது மோதாமல் நூழிலையில் உயர் தப்பினார்.
இந்த சம்பவங்களால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அப்பெண்ணை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், அப்பெண்ணை காதலித்து வந்த வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பெண்ணின் காதலனை போலீஸ் நிலையம் வரவழைத்து எச்சரித்தனர். பின்னர் பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.