மராட்டியத்தில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது; விமானி, பயிற்சி விமானி காயம்

மராட்டியத்தில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி, பயிற்சி விமானி காயத்துடன் உயிர் தப்பினர்.

Update: 2023-10-22 18:45 GMT

புனே, 

மராட்டியத்தில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி, பயிற்சி விமானி காயத்துடன் உயிர் தப்பினர்.

விவசாய நிலத்தில் விழுந்த விமானம்

மராட்டிய மாநிலம் புனே பாராமதி பகுதியில் 'ரெட்பேர்டு பிளைட் டிரைனிங் அகாடமி' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பயிற்சி நிறுவன விமானம் நேற்று காலை 6.45 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தது. வானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அதில் இருந்த விமானி, பயிற்சி விமானி விமானத்தை தாழ்வான உயரத்துக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் விமானம் கோஜூபாவி கிராமப்பகுதியில் உள்ள நந்து புரே என்பவரின் விவசாய நிலத்தில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது. இதில் விமானி அயன் அமா் தாஸ், பயிற்சி பெண் விமானியான பார்வதி வினோத் நாயர் ஆகியோர் விமானத்தில் சிக்கி தவித்தனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சீட் பெல்ட் உள்ளிட்ட உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியதாலும் மற்றும் குறைந்த உயரத்தில் இருந்து விமானம் விழுந்ததாலும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே விபத்தில் சிக்கிய பயிற்சி விமானத்தை காண கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 நாளில் 2-வது விபத்து

கடந்த வியாழக்கிழமை புனே மாவட்டம் பாராமதி தாலுகா கட்பால் கிராமத்தில் இதே தனியார் நிறுவனத்தின் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அந்த நிறுவனத்தின் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. 4 நாட்கள் இடைவெளியில் நடந்த 2 விபத்துகள் குறித்தும் விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்