ரூ.300 கோடி போதைப்பொருள் வழக்கில் போலீஸ் காவலில் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடியவர் கைது; சென்னை ஓட்டலில் சிக்கினார்
ரூ.300 கோடி போதைப்பொருள் வழக்கில் போலீஸ் காவலில் புனே ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியவர் சென்னையில் பிடிபட்டார்
மும்பை,
ரூ.300 கோடி போதைப்பொருள் வழக்கில் போலீஸ் காவலில் புனே ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியவர்சென்னையில் பிடிபட்டார்.
தப்பி ஓட்டம்
புனே மாவட்டம் சாக்கானில் போதைப்பொருள் வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் லலித் பாட்டீல்(வயது37). இவர் நாசிக்கை சேர்ந்தவர். புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட இவர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள சாசூன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2-ந் தேதி எக்ஸ்ரே எடுக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். அப்போது திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார், அவரை பிடிக்க முடியாததால் போலீசார் தேடிவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக 9 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ரூ.300 கோடி போதைப்பொருள்
இதற்கிடையே அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போது, ஆஸ்பத்திரிக்கு வெளியே ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அப்போது லலித் பாட்டீல் தான் தனக்கு அந்த போதைப்பொருளை கொடுத்தார் என்று கூறினார். லலித் பாட்டீல் போலீஸ் காவலில் இருக்கும் போது போதைப்பொருளை எப்படி வினியோகம் செய்தார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 6-ந் தேதி மும்பை சாக்கி நாக்கா போலீசார் ரூ.151 கிலோ மெபட்ரோன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடியாகும். இதில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் லலித் பாட்டீலுக்கு முக்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்ய சாக்கி நாக்கா போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
சென்னையில் சிக்கினார்
இதற்காக பல மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் இரவு சென்னை போலீசார் உதவியுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மும்பை அழைத்து வந்து அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர் வருகிற 23-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.