சிவசேனா தசரா கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ்சில் ஊர் திரும்பியவர்கள் மீது லாரி மோதியது; 10 பேர் காயம்
சிவசேனா தசரா கூட்டத்தில் கலந்து கொண்டு பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்
மும்பை,
தசரா பண்டிகையையொட்டி நேற்றுமுன்தினம் மும்பை ஆசாத் மைதானத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா தசரா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர். பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு கட்சி தொண்டர்கள் 20 பேர் நாசிக் மாவட்டம் சில்லோட் நோக்கி பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற பஸ் தானே மாவட்டம் மும்பை-நாசிக் நெடுஞ்சாலை சகாப்பூர் அருகே கொலம்பே பாலத்தில் நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று பஸ்சின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை தடுப்பு சுவரில் மோதியது. அப்போது பின்னால் வந்த மற்றொரு பஸ் விபத்தை ஏற்படுத்திய லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணித்த 10 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.