திருமணத்துக்கு மறுத்த 12-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுத்து கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் தற்கொலை
திருமணத்துக்கு மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
திருமணத்துக்கு மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி கொலை
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் மோக்டா பகுதியில் கபல்பாடா பகுதியில் உள்ள ஆசிரம பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தவர் அர்ச்சனா (வயது18). இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றார். மதியம் 12.30 மணியளவில் பள்ளியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள விடுதிக்கு தோழிகளுடன் நடந்து சென்றார். அப்போது மோக்டா பகுதியை சேர்ந்த பிரபாகர் (22) என்ற வாலிபர் அங்கு வந்தார். அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியின் கழுத்தை அறுத்தார். துடி, துடித்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் வாலிபர் அங்கு இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
திருமணத்துக்கு மறுத்ததால் வெறிச்செயல்
தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், மாணவி அர்ச்சனாவை வாலிபர் பிராபகர் திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளார். ஆனால் மாணவி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அவர் மோக்டா பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். மாணவியை கொலை செய்த பிறகு வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பால்கர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாசாகேப் பாட்டீல் கூறினார். திருமணத்துக்கு மறுத்த மாணவியை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.