ரூ.71 லட்சம் போதைப்பொருளுடன் 9 பேர் கைது- ரூ.18 லட்சம் ரொக்கமும் சிக்கியது
மும்பையில் ரூ.71 லட்சம் போதைப்பொருள் கடத்தி வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டுக்கட்டாக ரூ.18 லட்சம் ரொக்கமும் சிக்கியது.;
மும்பை,
மும்பையில் ரூ.71 லட்சம் போதைப்பொருள் கடத்தி வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டுக்கட்டாக ரூ.18 லட்சம் ரொக்கமும் சிக்கியது.
9 பேர் பிடிபட்டனர்
வெளிமாநிலத்தில் இருந்து மும்பைக்கு போதைப்பொருள் கடத்தி கொண்டு வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் மும்பை நுழைவு வாயிலான முல்லுண்ட் சுங்கச்சாவடி பகுதியில் வாகனங்களை கண்காணித்து வந்தனர். அங்கு வந்த 3 வாகனங்களை வழிமறித்து சோதனை போட்டனர். இதில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் மெபட்ரோன் மற்றும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 45 கிராம் சரஸ் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த 8 பேரை பிடித்து கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் குர்லாவை சேர்ந்த கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றொருவர் பிடிபட்டார்.
கட்டுக்கட்டாக ரொக்கம்
பிடிபட்ட அந்த நபரின் செம்பூரில் உள்ள வீட்டில் சோதனை போடப்பட்டது. அங்கு கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சத்து 89 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 9 பேரும் மும்பை மற்றும் தானேயில் 13 வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், 3 வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 19 லட்சம் ஆகும்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.