போரிவிலியில் அபாயகரமான 8 கட்டிடங்களில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு- எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு
போரிவிலியில் அபாயகரமான 8 கட்டிடங்களில் மின்சாரம், குடிநீர் இணைப்பை மாநகராட்சி துண்டித்தது. இதனை எதிர்த்து குடியிருப்புவாசிகள் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
மும்பை,
போரிவிலியில் அபாயகரமான 8 கட்டிடங்களில் மின்சாரம், குடிநீர் இணைப்பை மாநகராட்சி துண்டித்தது. இதனை எதிர்த்து குடியிருப்புவாசிகள் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
நோட்டீஸ்
மும்பை போரிவிலியில் கடந்த வாரம் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. விபத்து ஏற்படும் முன்பே அங்கு வசித்து வந்த குடியிருப்புவாசிகள் காலி செய்து இருந்தனர். இந்த விபத்தினை தொடர்ந்து மும்பை மாநகராட்சி அந்த வார்டுகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தது.
இதில் போரிவிலி கிழக்கு, மேற்கு, எம்.ஜி. கிராஸ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள 8 கட்டிடங்கள் சேதமடைந்து வசிக்க தகுதியற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கட்டிடத்தில் வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்யும்படி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு
இருப்பினும் குடியிருப்பு வாசிகள் இருப்பிடத்தை காலி செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் விடுக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதனால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து அந்த கட்டிடத்தில் வசித்து வரும் அஷிஷ் மேத்தா என்பவர் கூறுகையில், "நோட்டீஸ் விடுக்கப்பட்ட கட்டிடம் ஆபத்தானவை அல்ல. கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே நாங்கள் நோட்டீசை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளோம்" என தெரிவித்தனர்.
இதுபற்றி ஆர் வார்டு மாநகராட்சி அதிகாரி கூறுகையில், "மின்சாரம், குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டதால் அவர்களுக்கான மாற்று இடங்கள் தயாராக உள்ளது. அடுத்த 7 நாட்களில் கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.