வீட்டை விட்டு வெளியேறிய 7 வயது சிறுவன் புனேயில் மீட்பு

பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 7 வயது சிறுவனை போலீசார் புனேயில் மீட்டனர்.;

Update:2022-05-27 23:31 IST

வசாய்,

பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 7 வயது சிறுவனை போலீசார் புனேயில் மீட்டனர்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா கிழக்கு அல்காபுரி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன், கடந்த 23-ந் தேதி செல்போனில் விளையாடி கொண்டிருந்தான். இதனை கண்ட தாய் கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறினான். வெகுநேரமாக வீட்டிற்கு வராத சிறுவனை பல இடங்களில் தாய் தேடினாள். எங்கும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் ஆய்வு நடத்திய போது சர்ச்கேட் செல்லும் மின்சார ரெயிலில் சிறுவன் ஏறியதை கண்டனர். இது பற்றி மும்பை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

புனேயில் மீட்பு

மும்பை ரெயில்வே போலீசார் சிறுவனின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் புனே ரெயில்வே போலீசார் அங்குள்ள பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள இருக்கையில் சோர்வாக ஒரு சிறுவன் படுத்து இருந்ததை கண்டு விசாரித்தனர். இதில் காணாமல் போன நாலாச்சோப்ராவை சேர்ந்த சிறுவன் என தெரியவந்தது.

அவன் பெற்றோரிடம் கோபித்து கொண்டு காரட் பகுதியில் வசிக்கும் தாத்தா, பாட்டி வீட்டிற்கு செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இது பற்றி நாலாச்சோப்ரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுவனுக்கு உணவு, குடிநீரை போலீசார் வழங்கினர். தகவல் அறிந்த பெற்றோர் புனேவிற்கு சென்றனர். அங்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்து சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்