கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 7 பேர் கைது

சோலாப்பூரில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-25 19:15 GMT

மும்பை, 

சோலாப்பூரில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் பிடிபட்டனர்

சோலாப்பூர் பர்ஷி தேல் கிர்னி சவுக் பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு 4 பேர் வந்தனர். அங்கிருந்த கடைக்காரரிடம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கினர். இதனை வாங்கி பார்த்த கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில் அவை கள்ளநோட்டுகள் என தெரியவந்ததால் நைசாக போலீசுக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரை பிடித்து சோதனை போட்டனர். இதில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில், தங்களுக்கு மேலும் 2 பேர் நோட்டுகளை வழங்கியதாக தெரிவித்தனர். போலீசார் மற்ற 2 பேரை பிடித்தனர்.

7 பேர் கைது

இதில் மோகால் பகுதியை சேர்ந்த ஒருவர் தான் தங்களிடம் கள்ள நோட்டுகளை வழங்கியதாக தெரிவித்தனர். மோகால் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்டவரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை போட்டனர். அங்கு அவர் கள்ளநோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பிரிண்டர், பாதி அச்சிட்ட நோட்டுகள் உள்பட மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பல பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து பார்ஷி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற 7 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்