மரத்வாடா மண்டலத்தில் இந்த ஆண்டில் 685 விவசாயிகள் தற்கொலை; அதிர்ச்சி தகவல்
மரத்வாடா மண்டலத்தில் போதிய மழையின்மை காரணமாக இந்த ஆண்டில் மட்டும் 685 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
மும்பை,
மத்திய மராட்டியமான மரத்வாடா மண்டலத்தில் 8 மாவட்டங்கள் உள்ளன. இவை அவுரங்காபாத், ஜல்னா, பீட், பர்பானி, நாந்தெட், உஸ்மானாபாத், ஹிங்கோலி மற்றும் லாத்தூர் மாவட்டங்கள் ஆகும். இந்த மண்டலத்தில் நடப்பு ஆண்டில், அதாவது கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி வரையில் 685 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டும் 294 பேர் உயிரிழந்து உள்ளனர். அதிகப்பட்சமாக பீட் மாவட்டத்தில் மட்டும் 186 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது வேளாண் மந்திரி தனஞ்செய் முண்டேயின் சொந்த மாவட்டம் ஆகும். விவசாயிகள் தற்கொலைக்கு போதிய மழையின்மை முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.