ஆனந்த சதுர்த்தியையொட்டி தானேயில் 6 ஆயிரம் சிலைகள் கரைப்பு; புனே நகரில் பிரமாண்ட ஊர்வலம்
ஆனந்த சதுர்த்தியையொட்டி தானேயில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. புனே நகரிலும் பிரமாண்ட ஊர்வலத்துடன் சென்று சிலைகள் கரைக்கப்பட்டன.
மும்பை,
ஆனந்த சதுர்த்தியையொட்டி தானேயில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. புனே நகரிலும் பிரமாண்ட ஊர்வலத்துடன் சென்று சிலைகள் கரைக்கப்பட்டன.
தானே
மும்பையை போல தானேயில் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 10 நாட்கள் பூஜை முடிந்து ஆனந்த சதுர்த்தியில் உற்சாகமாக பொதுமக்கள் சிலைகளை கடல், நீர்நிலைகளில் கரைத்தனர். இந்த நாளில் மட்டும் தானேயில் 6 ஆயிரத்து 109 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கடந்த 10 நாட்களில் சேர்த்து 35 ஆயிரம் சிலை கரைக்கப்பட்டதாக தானே மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தானே மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், தானேயில் 35 ஆயிரத்து 414 சிலைகள் கரைக்கப்பட்டதாக கூறியுள்ளது. அதில் 1,047 சிலைகள் மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. 32 ஆயிரத்து 759 வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. 950 கவுரி சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புனேயில்...
இதேபோல புனேயிலும் பொதுமக்கள் ஆர்வமாக ஆனந்த சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை கரைத்தனர். இங்குள்ள நகரில் மண்டல்கள் சார்பில் 3 ஆயிரத்து 863 சிலைகள் நிறுவப்பட்டு இருந்தது. இவற்றில் பெரும்பாலான சிலைகள் ஆனந்த சதுர்த்தி தினத்தில் கரைக்கப்பட்டது. குறிப்பாக கஸ்பா கணபதி, தம்பாடி ஜோகேஷ்வரி, குர்ஜி தலீம், துல்சி பாக், கேசரிவாடா ஆகிய 5 விநாயகர் சிலை ஊர்வலத்தில் அதிகளவு மக்கள் திரண்டு இருந்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி தானே, புனேயில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.