தெருநாய்கள் கடித்து குதறி சிறுவன் பலி

நாக்பூர் மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து குதறி சிறுவன் பலியானான்.;

Update:2022-06-11 19:54 IST

நாக்பூர், 

நாக்பூர் மாவட்டம் கடோல் தாலுகாவில் உள்ள தான்டோலி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் விராஜ் ராஜூ ஜெய்வர். இவன் காலை 6.30 மணி அளவில் தனது அக்காளுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான். இருவரும் நடந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் திரிந்த தெருநாய்கள் கூட்டம் இருவரையும் பார்த்து குரைத்துள்ளது. இதனால் பயந்துபோன சிறுவன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். ஆனால் விடாமல் துரத்தி சென்ற தெருநாய்கள் சிறுவனை கடித்து குதறின. மேலும் அருகில் கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்திற்கு சிறுவனை இழுத்து சென்று தொடர்ந்து தாக்கின.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் சகோதரி நாய்களை விரட்ட முயற்சி செய்தாள். மேலும் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என அபயக்குரல் எழுப்பினாள். ஆனால் அவளின் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டியடித்து, சிறுவனை மீட்டனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிறுவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டான். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

தெருநாய்கள் கூட்டம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்