பைகுல்லாவில் 11-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலி
பைகுல்லாவில் 11-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.;
மும்பை,
பைகுல்லாவில் 11-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஜன்னல் வழியாக விழுந்தான்
மும்பை பைகுல்லா பகுதியில் ஜன் ஜாகுர்தி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் 5 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்தான். நேற்று காலை 10.15 மணியளவில் சிறுவன் அவனது படுக்கையில் விளையாடி கொண்டு இருந்தான். அவனுடன் அறையில் குடும்பத்தினரும் இருந்து உள்ளனர்.
இந்தநிலையில் அவன் திடீரென அறையில் இருந்த ஜன்னலை எட்டிப்பார்த்தான். குடும்பத்தினர் ஓடிச்சென்று பிடிக்க முயன்றனர். எனினும் அவன் கண் இமைக்கும் நேரத்தில், எதிர்பாராதவிதமாக கம்பி இல்லாத ஜன்னல் வழியாக கீழே விழுந்தான்.
சிறுவன் பலி
இதில் கீழே நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டர் மீது விழுந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். சம்பவம் குறித்து போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலியான சம்பவம் பொது மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.