தீய சக்திகளிடம் இருந்து கணவரை காப்பாற்றுவதாக கூறி பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த 5 பேர் கைது

தீய சக்திகளிடம் இருந்து கணவரை காப்பாற்றுவதாக கூறி பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-17 18:45 GMT

பால்கர், 

தீய சக்திகளிடம் இருந்து கணவரை காப்பாற்றுவதாக கூறி பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசை வார்த்தைகள்

பால்கர் மாவட்டம் தலசாரி பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கும், அவரது கணவருக்கு இடையே சிறிய சண்டைகள் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கணவரின் நண்பர்களான 5 பேர் அந்த பெண்ணை அணுகி அவர் வீட்டின் வாஸ்து சரியில்லை. மேலும் அவர் மீது தீய சக்திகள் ஏவி விடப்பட்டுள்ளன. இதில் இர்உந்து அவரை மீட்டெடுக்க சில சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் அந்த மந்திர, தந்திர சடங்குகளை செய்தால் அவர் சாந்தமானவராக மாறுவதுடன், செல்வம் பெருகும். அவருக்கு நிலையான அரசு வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். அவர்களின் பேச்சை முழுமையாக நம்பிய அந்த பெண், அவர்கள் கூறிய சடங்குகளை மேற்கொள்ள சம்மதித்தார்.

பலமுறை பலாத்காரம்

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கணவரின் நண்பர்கள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வர தொடங்கினர். அப்போது அப்பெண்ணை தனிமையில் அழைத்து சென்று பூஜை சடங்குகள் என்ற பெயரில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் தானேயில் உள்ள யூர் வனப்பகுதி, பின்னர் காந்திவிலியில் உள்ள குற்றவாளிகளில் ஒருவரின் மடம், லோனாவாலாவில் உள்ள ஒரு ரிசார்ட் என பல்வேறு பகுதிகளுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பலாத்காரம் செய்தனர். மேலும் இந்த சடங்குகளை மேற்கொள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை அந்த பெண்ணிடம் இருந்தே வாங்கி உள்ளனர்.

கைது

இந்த நிலையில் தன்னை அவர்கள் ஏமாற்றுவதை உணர்ந்துகொண்ட பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த ரவீந்திர பேட், திலீப் கெய்க்வாட், கவுரவ் சால்வி, மகேந்திர குமாவத் மற்றும் கணேஷ் கதம் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது பலாத்காரம், ஒரே பெண்ணை திரும்ப, திரும்ப பலாத்காரம் செய்தால், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதானவர்கள் இதேபாணில் வேறு யாரையும் ஏமாற்றி இருக்கிறார்களா என்று கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்