புனேயில் விவசாயி வீட்டில் வைத்திருந்த 400 கிலோ தக்காளி திருட்டு - போலீசார் விசாரணை
புனேயில் விவசாயி ஒருவர் தனது வீட்டில் வைத்திருந்த 400 கிலோ தக்காளி மாயமானதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.
மும்பை,
புனேயில் விவசாயி ஒருவர் தனது வீட்டில் வைத்திருந்த 400 கிலோ தக்காளி மாயமானதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.
தக்காளிக்கு மவுசு
நாடு முழுவதும் அதிரடி விலை உயர்வை கண்டுள்ள தக்காளிக்கு மவுசு அதிகரித்து உள்ளது. சமையல் அறையில் மட்டுமே இடம்பிடித்து இருந்த தக்காளி விலை உயர்வு காரணமாக சீர்வரிசை தாம்பூலத்தில் இடம்பெறுவதுடன் பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் பரிசு பொருளாகவும் மாறி உள்ளது. விலை தொடர்ந்து இறங்காமல் இருப்பதால் தக்காளி, தங்கத்தை போல பாதுகாக்கப்படுகிறது.
400 கிலோ திருட்டு
இந்தநிலையில் மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் சிரூர் பகுதியை சேர்ந்த விவசாயி அருண் தோமே என்பவர் தனது வீட்டில் வைத்திருந்த 400 கிலோ தக்காளியை காணவில்லை என போலீசில் புகார் அளித்து உள்ளார். அந்த விவசாயி கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் விளைந்த தக்காளியை பறித்து வீட்டுக்கு கொண்டு வந்தார். இரவில் தக்காளி வீட்டில் இருந்தது. மறுநாள் காலை எழுந்து பார்த்த போது 400 கிலோ எடையுள்ள 20 பெட்டி தக்காளியை காணவில்லை. தக்காளி மாயமானதால் தனக்கு ரூ.20 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புனேயை சேர்ந்த விவசாயி ஒருவர் தக்காளி விற்பனை மூலம் ஒரே மாதத்தில் ரூ.3 கோடி சம்பாதித்து வியப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.