கல்வா, மும்ரா பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடிய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது

கல்வா, மும்ரா பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடிய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 39 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-08-14 11:56 GMT

தானே, 

கல்வா, மும்ரா பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடிய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 39 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

போலீசில் புகார்

தானே மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வா, மும்ரா, சீல் டைகர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் திருடப்பட்ட இரு சக்கர வாகனங்களை விற்க கும்பல் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகம் படும்படி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

3 பேர் கைது

அவர்களை பிடித்து விசாரித்ததில் மும்ராவை சேர்ந்த முகமது சித்திக் (வயது47), ஜாவத் கான் (23) என்பது தெரியவந்தது. அவர்களிடம் வாகனம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவத்தில் தொடர்புயை ஆட்டோ டிரைவர் பைசான் சேக் (22) என்பவரையும் கைது செய்தனர்.

இவர்கள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை நம்பர் பிளேட்டை மாற்றி பெயிண்ட் அடித்து குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளனர். 3 பேரிடம் இருந்து 39 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்