துலேயில் 21 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் - வாலிபர் அதிரடி கைது
மராட்டியத்தில் தானியங்கி நாட்டு துப்பாக்கி உள்பட 21 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 280 தோட்டாக்கள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
மராட்டியத்தில் தானியங்கி நாட்டு துப்பாக்கி உள்பட 21 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 280 தோட்டாக்கள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துப்பாக்கி குவியல்
துலேயில் உள்ள பல்ஸ்நேர் நகரில் ஆசாமி ஒருவர் அதிகளவில் துப்பாக்கி கடத்தலில் ஈடுபடுவதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பல்ஸ்நேர் சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சுர்ஜித் சிங்(வயது27) என்பவர் பிடிபட்டார். அவரிடம் சோதனை நடத்தியதில் நாட்டு துப்பாக்கிகள் குவியலாக சிக்கின. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 21 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இதில் ஒன்று தானியங்கி நாட்டு துப்பாக்கி ஆகும். மேலும் 280 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்
கைதான ஆசாமி மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டம் உமர்திகாவ் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர் மீது ஏற்கனவே கடந்த ஆண்டு தானே வாக்ளே எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. துப்பாக்கி கடத்தி விற்பனை செய்யும் தொழிலுக்காக இவ்வளவு நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் சுர்ஜித் சிங்கை கைது செய்து தானே அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை வருகிற 18-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் சுர்ஜித் சிங்கிடம் ஆயுத கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.