என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் அதிரடி கைது - புனேயில் சிக்கினர்
தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் புனேயில் கைது செய்யப்பட்டனர்.;
புனே,
தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் புனேயில் கைது செய்யப்பட்டனர்.
ரூ.5 லட்சம் சன்மானம்
மராட்டிய மாநிலம் புனே கோத்ரூட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் திருடியதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்திக்கொண்டு இருந்தபோதே அந்த 3 பேரில் ஒருவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த இம்ரான் முகமது யூசுப் கான்(வயது23) மற்றும் முகமது யூனஸ் முகமது யாகூப் சாகி(24) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் ராஜஸ்தானில் பயங்கரவாத தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) தேடப்பட்டு வந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. அவர்களின் தலைக்கு தலா ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இருவரும் கடந்த 16 மாதங்களாக புனே கோந்த்வா பகுதியில் தங்கியிருந்து உள்ளனர்.
போலீஸ் காவல்
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்களின் வீட்டில் இருந்து துப்பாக்கி தோட்டா, 4 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி 8 நாள் போலீஸ் காவலில் எடுத்த போலீசார், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புனேயில் அவர்கள் ஏதேனும் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தனரா? என்பது குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. தப்பி ஓடிய மற்றொருவரை தேடுவதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாத செயலில் தொடருடையவர்கள் புனேயில் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.