மும்பை வந்த விமானத்தில் மது போதையில் ரகளை செய்த 2 பயணிகள் கைது

துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பயணிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-23 18:45 GMT

மும்பை, 

துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பயணிகளை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் பயணிகள்

துபாயில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் மராட்டியத்தை சேர்ந்த ஜான் டிசோசா (வயது49), தத்தாரே பாபர்தேகர் (47) ஆகியோரும் வந்தனர். அவர்கள் விமானத்தில் ஏறும் போதே மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் விமானத்திலும் அவர்கள் மது குடித்துள்ளனர்.

போதை தலைக்கு ஏறிய பிறகு 2 பேரும் விமானத்தில் அங்கும், இங்கும் நடந்தனர். சத்தமாக சிரித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். விமான பணிப்பெண்கள் அவர்களை இருக்கையில் உட்காருமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மீண்டும் மதுகுடிக்க தொடங்கினர்.

விமானத்தில் ரகளை

விமானத்தில் மது குடிக்க கூடாது என பணிப்பெண்கள் எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. எனவே விமான பணியாளர்கள் அவர்கள் வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பணியாளர்களை அவதூறாக பேசினர். பயணிகளையும் இழிவாக பேசி ரகளையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் விமானம் மும்பை வந்தவுடன் ரகளையில் ஈடுபட்ட பயணிகள் 2 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து விமான பணிப்பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பயணிகளையும் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்