தட்டம்மை பரவலை தடுக்க மும்பையில் 1.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி

தட்டம்மை நோய் பரவலை தடுக்க மும்பையில் 1.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.;

Update:2022-11-28 00:15 IST

மும்பை, 

தட்டம்மை நோய் பரவலை தடுக்க மும்பையில் 1.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

1.4 லட்சம் தடுப்பூசி

மும்பையில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குடிசைப்பகுதிகளில் குழந்தைகளில் அதிகளவில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரில் இதுவரை 13 குழந்தைகள் தட்டம்மைக்கு உயிரிழந்து உள்ளன. சுமார் 3 ஆயிரத்து 500 குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது 134 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே நோய் பரவலை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தாராவியில் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு தட்டம்மை பாதிப்பு அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மும்பையில் 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கூடுதல் தட்டம்மை தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

6 மாத குழந்தைகளுக்கு ஊசி

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 1.3 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போட உள்ளோம். இந்த குழந்தைகள் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருந்தாலும் நோய் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்படும்.

இதேபோல இதற்கு முன் இல்லாத வகையில் 6 முதல் 9 மாதம் வரையிலான 3 ஆயிரத்து 496 குழந்தைகளுக்கும் தட்டம்மை தடுப்பூசி போட உள்ளோம்.

மத்திய சுகாதாரத்துறையின் பரிந்துரையை அடுத்து 6 முதல் 9 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட உள்ளோம்." என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்