தானே, புனேயில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மேலும் 10 பேர் கைது
தானே, புனேயில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தானே,
கடந்த 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு துறை, அமலாக்கத்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. மேலும் நாடு முழுவதும் உள்ள இந்த அமைப்புகளில் கடந்த 22-ந் தேதி நிர்வாகிகள், தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மராட்டியம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்பட 15 மாநிலங்களில் இருந்து 106 பேரை கைது செய்தனர். இதில் மராட்டியத்தில் 20 பேர் சிக்கினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தானே மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மும்ராவில் 2 பேரும் கல்யாண், பிவண்டி நகரங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர்.
இதே போல புனே நகரில் கோந்துவா பகுதியில் இருந்து 6 பேரை நேற்று காலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தானே மற்றும் புனேயில் இருந்து மொத்தம் 10 பேர் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.