தெலுங்கானாவில் 8 ஆண்டுகளில் 8,000 விவசாயிகள் தற்கொலை - ஒய்.எஸ்.சர்மிளா குற்றச்சாட்டு

தெலுங்கானாவில் 8 ஆண்டுகளில் 8,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒய்.எஸ்.சர்மிளா கூறியுள்ளார்.;

Update:2023-02-09 01:54 IST

ஹனுமகொண்டா,

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொது பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை மராட்டியத்தின் நான்டெட் நகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மராட்டியம் இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் இதை குறிப்பிட்டு, தெலுங்கானாவில் 8 ஆண்டுகளில் 8,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலை பற்றி முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியது நல்லது. அதே போல் தெலுங்கானாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற கேள்விக்கும் பதில் தர வேண்டும் அல்லவா? தேசிய குற்ற ஆவணக் காப்பகம், தெலுங்கானா காவல் துறை மற்றும் ரைத்து ஸ்வராஜ் வேதிகா ஆகிய மூன்று அறிக்கைகளை நான் உங்கள் முன் வைக்கிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில் தெலுங்கானாவில் 8000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக இந்த மூன்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா மாநிலம் உருவாகி, கே.சி.ஆர் முதலமைச்சரான பிறகு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த விவசாயிகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? அவர்களின் குடும்பங்கள் மனிதர்கள் இல்லையா? மராட்டியத்தில் உயிரிழந்த விவசாயிகளை மட்டும் பார்க்கிறீர்களா? நம் மாநிலத்தில் பல விவசாயிகள் இறக்கும் போது, அவர்களின் குடும்பங்களையும் குழந்தைகளையும் நீங்கள் பார்க்கவில்லையா? தெலுங்கானா மக்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்