காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக விளங்குகிறது - ஒய்.எஸ்.ஷர்மிளா

டெல்லியில் காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார் ஒய்.எஸ்.ஷர்மிளா.

Update: 2024-01-04 06:36 GMT

புதுடெல்லி,

ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். ஒய்.எஸ்.ஷர்மிளா தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போகிறார் என்ற பேச்சுகள் அண்மையில் திடீரென எழுந்தன. இதையடுத்து, கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவு படுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். அதன்படி, ஒய்.எஸ்.ஷர்மிளாவின் கட்சி காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியையும் பிடித்தது.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லி அலுவலகத்தில் காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸ் கட்சியுடன் ஷர்மிளா இணைத்துக்கொண்டார். நடந்து முடிந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஷர்மிளா ஆதரவு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின் ஒய்.எஸ்.ஷர்மிளா கூறியதாவது:-

" காங்கிரஸ் கட்சி நம் நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக விளங்குகிறது. அது எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புகிறது"  என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்