கர்நாடகாவில் தொடரும் பதற்றம்; துணிக்கடை முன் இளைஞர் வெட்டிக்கொலை - முகமூடி அணிந்த கும்பல் வெறிச்செயல்

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக இளைஞரணி மாவட்ட நிர்வாகி கொடூரமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டார்.;

Update: 2022-07-29 05:37 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்லரி பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் நட்டார் (வயது 32). இவர் பாஜக இளைஞரணி மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் அதேபகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.

இதனிடையே, கடந்த செவ்வாய்கிழமை இரவு பிரவீன் நட்டார் தனது கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த சிலர் பிரவீன் நட்டாரை இடைமறித்து கத்தி, வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. இந்த கொடூர தாக்குதலில் பிரவீன் நட்டார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த கொடூர கொலை சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சாக்கீர் (வயது 29), சஃபிக்யூ (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ. ஆகிய அமைப்புகளை சேர்ந்த 21 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேலும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாவட்டத்தின் சூரத்கல் மங்கல்பெட் பகுதியை சேர்ந்த முகமது பைசல் என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வெளியே நேற்று இரவு 8 மணியளவில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் முகமூடி அணிந்து வந்த கும்பல் பைசலை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த முகமது பைசல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பைசல் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து சூரத்கல், முல்கி, பனம்பூர், பஜ்பி உள்ளிட்ட நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தட்சிண கன்னடாவில் 3 நாட்களில் 2 கொலைகள் நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் தொடரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இஸ்லாமிய மதத்தின் சன்னி பிரிவை சேர்ந்த பைசல் ஷியா பிரிவை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதற்கு பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததாகவும் இதன் காரணமாக பைசல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்