திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கொலை: உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணம் செய்ய தீபா மறுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா பைசவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தீபா(வயது 21). இவருடைய மாமா மால்தேஷ்(வயது 35). இவர்கள் 2 பேருக்கும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதற்காக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தனது மாமாவை திருமணம் செய்ய தீபா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் குடும்பத்தினர் பேசி சமாதானம் செய்தனர். எனினும் அவர் தனது மாமாவை திருமணம் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் மால்தேஷ் ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் தீபாவை, மால்தேஷ் அருகில் உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தீபாவிடம், என்னை திருமணம் செய்ய ஏன் மறுக்கிறாய் என கேள்வி கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவர் இடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தீபாவை அவர் தாக்கி உள்ளார். இதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்த அவர், போலீசுக்கு பயந்து தீபாவின் உடலை அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து அறிந்தவுடன் ஹனகல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மால்தேசை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணத்திற்கு மறுத்ததால் தீபாவை கொன்று, உடலை தூக்கில் தொங்கவிட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.