மத அமைப்பின் பேரணியில் கையில் வாளுடன் அணிவகுத்த பெண்கள்...!
மத அமைப்பின் பேரணியில் பங்கேற்ற பெண்கள் கையில் வாளுடன் அணிவகுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கீழாரூர் என்ற பகுதியில் இந்து மத அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்கள் பிரிவு 'துர்கா வாஹினி' சார்பில் கடந்த 22-ம் தேதி பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பெண்கள் தங்கள் கையில் வாள் ஆயுதத்தை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். பேரணியில் சில பெண்கள் தங்கள் கைகளில் நீளமான சிலம்ப கம்பு ஏந்தியபடி சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், இந்த பேரணி தொடர்பாக இஸ்லாமிய மத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு போலீசில் புகார் அளித்தது. இந்த புகாரை தொடர்ந்து இந்து மத அமைப்பு விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்கள் பிரிவு 'துர்கா வாஹினி' நடத்திய பேரணியில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாமிய மத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்திய பேரணியில் 10 வயது சிறுவன் இந்து, கிருஸ்தவ மதத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வு, எச்சரிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியது சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... 'அமைதியாக வாழ்ந்தால் உங்களை வாழ விடுகிறோம் இல்லையேல்...' - மத அமைப்பின் பேரணியில் எச்சரிக்கை விடுத்த சிறுவன்