சித்ரதுர்காவில் அசுத்த நீர் குடித்த இளம்பெண் சாவு

சித்ரதுர்காவில் அசுத்த நீரை குடித்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-08-01 18:45 GMT

சித்ரதுர்கா:

சித்ரதுர்கா (மாவட்டம்) டவுன் காவடிஹட்டி பகுதியில் நகரசபை சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அந்தப்பகுதியில் குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்ட நீரை குடித்த 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் 20 பேரையும் அந்தப்பகுதி மக்கள் மீட்டு சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மஞ்சுளா (வயது 21) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மஞ்சுளாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் 20 பேருக்கு அந்த ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 3 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்ரதுர்கா கலெக்டர் திவ்யாபிரபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காவடிஹட்டி கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் கலெக்டர் திவ்யாபிரபு, அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து காவடிஹட்டி பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரை ஆய்வு செய்ய கலெக்டர் திவ்யாபிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சுகாதார துறை அதிகாரிகள் காவடிஹட்டி கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் குழாயில் வந்த குடிநீரை பிடித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது அந்தப்பகுதி மக்கள், நகரசபை சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குடிநீர் தொட்டி அசுத்தமாகவும், மாசுடன் காணப்படுவதாகவும், இதனை சரி செய்ய நகரசபை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சித்ரதுர்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அசுத்த நீர் குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை

ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்