காதலனுடன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருமணம் முடிந்தும் பழைய காதலை மறக்க முடியாததால் வீட்டைவிட்டு வெளியேறி காதலனுடன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் யாதகிரியில் நடந்துள்ளது.
பெங்களூரு:-
காதல் ஜோடி
யாதகிரி மாவட்டம் சகாப்புரா தாலுகா ஹுருசகுண்டகி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவர்ணா(வயது 20). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஷப்பா(22). இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதில் சுவர்ணாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் சுவர்ணாவுக்கு வேறு ஒரு இடத்தில் வரன் பார்த்து திருமணமும் செய்து வைத்தனர். திருமணம் முடிந்ததும், சுவர்ணாவை அவரது கணவர் பெங்களூருவுக்கு அழைத்து வந்துவிட்டார். பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
பழையா காதலை மறக்க முடியவில்லை
இந்த நிலையில் சுவர்ணாவால் தனது பழைய காதலனை மறக்க முடியவில்லை. அதேபோல் ஈஷப்பாவும், தனது காதலியான சுவர்ணாவிடம் செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுவர்ணா பெங்களூருவில் இருந்து தனது கணவர் உள்பட யாரிடமும் தெரிவிக்காமல் யாதகிரிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் தனது காதலன் ஈஷப்பாவை சந்தித்துள்ளார்.
பின்னர் காதலர்கள் இருவரும் கண்டிப்பாக நம்மால் வாழ்வில் ஒன்றுசேர முடியாது, அதனால் சாவிலாவது ஒன்று சேருவோம் என்று எண்ணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
விஷம் குடித்து தற்கொலை
அதையடுத்து இருவரும் ஹுருசகுண்டகி கிராமத்தையொட்டிய வனப்பகுதிக்கு நேற்று அதிகாலையில் சென்று அங்கு வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று அவர்கள் இருவரும் இறந்து கிடப்பதை பார்த்த கிராம மக்கள் இதுபற்றி சகாப்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈஷப்பா மற்றும், சுவர்ணாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.