மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை
மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூரு;
கல்லூரி பேராசிரியை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தாலுகா மரோலி பகுதிைய சேர்ந்தவர் சவுமியா நாயக் (வயது 34). தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் மல்லிகார்ஜுன பசவராஜ் ( 35) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்பு இருவரும் மங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த2 நாட்களுக்கு முன்பு விடுமுறையை கழிப்பதற்காக குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர். நேற்று முன்தினம் இரவுதான் இரண்டு பேரும் மங்களூரு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வெகுநேரமாகியும் அவர்களின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே கங்கநாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தம்பதி தற்கொலை
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை தட்டி பார்த்தனர். உள்ளிருந்து எந்தவிதமான சத்தமும் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர்.
அதில் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. குடகு சுற்றுலா சென்று திரும்பிய பின்னர் இந்த தற்கொலை நடந்திருப்பதால், அங்கு ஏதேனும் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த கங்கநாடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.