நீங்கள் என்னுடைய குடும்பத்தினர்... ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை
தீபாவளி என்பது பயங்கரவாத முடிவுக்கான திருவிழா என்றும் அதனை கார்கில் சாத்தியம் ஆக்கியுள்ளது எனவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
லடாக்,
பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வழக்கம் கொண்டுள்ளார். இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி கார்கில் புறப்பட்டு சென்றார்.
கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். கார்கிலில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜே போன்ற கோஷங்களை வீரர்கள் எழுப்பினர்.
அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை அவர் வழங்கினார். இதன்பின்பு, பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் முன் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக எனக்கு, குடும்பத்தினராக இருந்து வருகிறீர்கள். கார்கிலில் தைரியமுடைய நம்முடைய வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது என்பது எனக்கு கிடைத்த சிறப்புரிமை.
இந்திய பாதுகாப்பின் தூண்களாக படைகள் உள்ளன. கார்கிலின் இந்த வெற்றி நிலத்தில் இருந்து நாட்டு மக்கள் மற்றும் உலகத்திற்கு மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன்.
கார்கிலில் நமது படைகள் பயங்கரவாதத்தினை அழித்தது. அதற்கு சாட்சியாக இன்னும் இருப்பதற்காக நான் அதிர்ஷ்டசாலியாகிறேன். என்னுடைய பழைய புகைப்படங்களை இங்கே என்னிடம் காட்டினார்கள். அதற்காக நன்றியுணர்வு கொண்டவராக இருக்கிறேன் என பேசியுள்ளார்.
தீபாவளி என்பது பயங்கரவாத முடிவுக்கான திருவிழா. அதனை கார்கில் சாத்தியம் ஆக்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.