மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடு இன்னொரு பிளவை சந்திக்க தயாராக இல்லை என்றும் உத்தபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசினார்.

Update: 2023-04-26 18:45 GMT

மண்டியா:

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடு இன்னொரு பிளவை சந்திக்க தயாராக இல்ைல என்றும் உத்தபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசினார்.

யோகி ஆதித்யநாத் 'ரோடு ஷோ'

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். பிரியங்கா காந்தி மைசூரு, சாம்ராஜ்நகரில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். நேற்று மண்டியாவில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். பெங்களூருவில் இருந்து மண்டியாவுக்கு ஹெலிகாப்டரில் வந்த அவரை மந்திரி அஸ்வத் நாராயண், பிரதாப் சிம்ஹா எம்.பி., நடிகை சுமலதா அம்பரீஷ் எம்.பி. ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் மண்டியா டவுன் சஞ்சய் சர்க்கிளில் இருந்து மகாவீர் சர்க்கிள் வரை 800 மீட்டர் தூரத்துக்கு திறந்த வேனில் 'ரோடு ஷோ' நடத்தினார். வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். யோகி ஆதித்யநாத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடவுள்-பக்தர் உறவு

இதையடுத்து மண்டியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது:-

உத்தரபிரதேசம், கர்நாடகம் இடையே நீண்ட கால பந்தம் உள்ளது. இது இன்று நேற்று உருவான பந்தம் இல்லை. இந்த உறவு மிகவும் புனிதமானது. ராமர் பிறந்தது உத்தரபிரதேசம். அனுமன் பிறந்தது கர்நாடகம். கடவுள்-பக்தர் உறவு தான் மிகப்பெரியது. அந்த உறவு தான் உத்தரபிரதேசம்-கர்நாடகம் இடையே உள்ளது. ராமர் கோவில் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அனுமன் கோவில் உள்ளது.

அரசியல் சாசனத்துக்கு எதிரானது

காங்கிரஸ் கட்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பை கவர்ந்தது. அக்கட்சி மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்கியது. அதாவது முஸ்லிம்களுக்கு 4 சதவீத தனி இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வழங்கியது. இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதனால் அந்த இட ஒதுக்கீட்டை பா.ஜனதா அரசு ரத்து செய்துள்ளது. 1947-ம் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்பட்டது.

அதனால் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது. இதன் மூலம் நாடு இன்னொரு பிளவை சந்திக்க தயாராக இல்லை. மத்திய-மாநில அரசுகள் பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்தன. அந்த அமைப்பை உடைத்துள்ளோம். இரட்டை என்ஜின் அரசால் உத்தரபிரதேசத்தில் மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஊரடங்கு இல்லை, வன்முறை இல்லை. எல்லாம் நல்ல முறையில் நடக்கிறது.

உத்தரபிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளாக எந்த வன்முறையும் நிகழவில்லை. ஒரே நாடு உயர்ந்த நாடு என்ற கொள்கையில் பா.ஜனதா நம்பிக்கை கொண்டுள்ளது. அப்போது தான் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும். ஒரு சமூகத்தை கவரும் அரசியலை நாங்கள் நம்புவது இல்லை. அதற்கு பதிலாக அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்.

அயோத்தியில் ராமர் சிலை

இரட்டை என்ஜின் அரசால் மட்டுமே பாதுகாப்பு வளர்ச்சி சாத்தியம். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா தேவை. இங்கு மீண்டும் இரட்டை என்ஜின் அரசு வர வேண்டும். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவுக்கு ராமர், அனுமன் பக்தர்கள் அனைவரும் வர வேண்டும். அயோத்தியில் கர்நாடக பவன் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கன்னடத்தில் பேசி அசத்திய யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடி கர்நாடகம் வரும்போதெல்லாம், கன்னடத்தில் பேசி தனது உரையை தொடங்குவார். அதேபோல், மண்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கன்னடத்தில் பேச்சை தொடங்கினார். அதாவது 'சர்க்கரை தேசமான மண்டியா மக்களுக்கு எனது வணக்கங்கள், ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு எனது பக்தி வணக்கங்கள்' என்று பேச்சை தொடங்கினார். அவர் கன்னடத்தில் பேசியபோது அங்கு இருந்த மக்களும், பா.ஜனதா தொண்டர்களும் கரகோஷங்களை எழுப்பினர். மேலும் கன்னட கவி குவெம்புவின், 'ஜெய பாரத ஜனனி தனுஜாதே, ஜெயஹே கர்நாடகா மேதே..' என்ற பாடலை கன்னடத்தில் பாடினார். பின்னர் மண்டியாவில் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கன்னடத்தில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்