கர்நாடகத்தில் யோகா தின விழா கோலாகலம்

கர்நாடகத்தில் நேற்று யோகா தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர், மாணவர்கள், முதியவர்கள் யோகாசனங்கள் செய்து அசத்தினர்.;

Update: 2023-06-21 20:56 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று யோகா தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர், மாணவர்கள், முதியவர்கள் யோகாசனங்கள் செய்து அசத்தினர்.

யோகா தின விழா

சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் கர்நாடகத்திலும் பல இடங்களில் யோகா தினத்தையொட்டி நேற்று மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட திரையுலகினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் யோகா சனம் செய்தனர்.

பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் நடந்த யோகா தினத்தை கவர்னர் தாவர்சந்த் கெலாட் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பல்வேறு ஆசனங்களை செய்தார். அவருடன் சபாநாயகர் யு.டி.காதர், சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ், சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த துணை தலைவர் டி.ஏ.ஷரவணா, மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கடற்படை வீரர்கள்

அதுபோல் மைசூரு அரண்மனை வளாகத்தில் நடந்த யோகா தின விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சூரிய நமஸ்காரம் உள்பட பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், முதியவர்களும் கலந்துகொண்டு யோகாசனங்களை செய்தது பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது. இங்கு கடந்த ஆண்டு நடந்த யோகாசன தின விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகாசனங்களை செய்தது நினைவுகூரத்தக்கது.

உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள ரவீந்திரநாத் கடற்கரையில் நேற்று கடற்படை வீரர்கள் உலக யோகா தினத்தையொட்டி யோகாசனம் செய்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் கார்வார் டவுனில் காவலர் நல மண்டபத்தில் நடந்த யோகாதின விழவில் கலெக்டர் பிரபுலிங்க கவளிகட்டி உள்பட பலர் யோகாசனம் செய்தனர்.

பசவராஜ்பொம்மை

துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திலும் யோகாதினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் சித்தலிங்க சுவாமி தலைமையில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். அதுபோல் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை யோகாசனம் செய்தார். அதுதொடர்பான படங்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும் கொப்பல், தார்வார், பல்லாரி, உடுப்பி, பெலகாவி, பீதர், ராய்ச்சூர், தாவணகெரே உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் சர்வதேச யோகா தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

நடிகைகள்

கன்னடம், தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான குட்டி ராதிகா என்கிற ராதிகா குமாரசாமி யோகா தினத்தையொட்டி தான் செய்த யோகாசனங்கள் தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். அத்துடன் அதில் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம், கடந்த காலத்தையும் மறந்துவிடுங்கள் என குறிப்பிட்டு இருந்தார். அவரது யோகாசன படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

அதுபோல் கன்னட முன்னணி நடிகை ராகிணி திவேதியும், யோகா தினத்தையொட்டி தனது யோகாசன படங்கள், வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்