ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருகிறது: பிரதமர் நரேந்திர மோடி உரை

மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Update: 2022-06-21 02:17 GMT

Image Courtacy: ANI

மைசூரு,

சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நாடு முழுவதும் 75 நகரங்களில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யோகா தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடத்த முடியாததால், இந்த ஆண்டு பிரமாண்டமாக அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று துவக்கி வைத்தார். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியுடன் மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்களுடன் பிரதமர் மோடி வெள்ளை உடையில் யோகா மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் பாஜக நிர்வாகிகள் பலர் மேடையில் யோகா மேற்கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதரமர் மோடி, "ஒட்டுமொத்த உலகிற்கும் யோகா அமைதியை தருகிறது. மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவுகிறது.யோகா மூலம் மில்லியன் கணக்கான மக்கள் உலகளாவிய அமைதியின் சூழலை உருவாக்குவார்கள்.

யோகாவால் தான் மக்களையும் நாடுகளையும் இணைக்க முடியும். மேலும் யோகா நம் அனைவருக்கும் பிரச்சனைக்கான ஒரு தீர்வாக மாறும். இந்த முழு பிரபஞ்சமும் நமது உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் தொடங்குகிறது. யோகா நமக்குள் இருக்கும் அனைத்தையும் நமக்கு உணர்த்துகிறது, விழிப்புணர்வு உணர்வை உருவாக்குகிறது" என்று அவர் கூறினார்.

இந்த வருடம் யோகாவிற்கான தீம் "மனித நேயத்துக்கான யோகா" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 8வது யோகா தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஒவ்வொரு மாநில தலைநகரில் இருக்கும் கவர்னர் மாளிகைகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதேபோல் தனியார் அமைப்புகள் சார்பாகவும் யோகா நிகழ்ச்சிகள் நாடு முழுக்க இன்று நடத்தப்படுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்