பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்- முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா

சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவது குறித்து பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

Update: 2022-07-23 21:08 GMT

பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

இறுதி முடிவு அல்ல

சிகாரிப்புரா தொகுதிக்கு நான் எப்போது சென்றாலும், அடுத்த சட்டசபை தேர்தலில் நீங்களே போட்டியிட வேண்டும் என்று தொகுதி மக்கள் தொடர்ந்து கூறி வந்தனர். அதே நேரத்தில் விஜயேந்திராவுக்கும் மண்டியாவில் போட்டியிடும் படியும், மைசூருவில் போட்டியிடும் படியும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. சிகாரிப்புரா தொகுதி மக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அந்த தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று கூறி இருந்தேன். இந்த விவகாரம் தற்போது பெரிதாக்கப்பட்டு பேசப்படுகிறது.

சிகாரிப்புரா தொகுதி மக்களிடம் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை, அதனால் தான் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று கூறினேன். மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கு விஜயேந்திரா வெற்றி பெறுவார். அதற்கான சக்தி விஜயேந்திராவிடம் உள்ளது. சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று மட்டுமே கூறியுள்ளேன். தொகுதிகளின் மக்களின் அழுத்தம் காரணமாக அவ்வாறு நான் கூறினேன். அதுவே இறுதியான முடிவு அல்ல.

பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவுக்கு...

வாரிசு அரசியலுக்கு எதிராக பிரதமர் மோடி பேசி வருகிறார். அதனால் சிகாரிப்புரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவது குறித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். பா.ஜனதாவில் இருந்து நான் ஓரங்கட்டப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். பா.ஜனதா எனக்கு எல்லா பதவி களையும் வழங்கி உள்ளது. கட்சியின் சாதாரண தொண்டனான நான், தேசிய அளவில் தற்போது வளர்ந்துள்ளேன். 4 முறை முதல்-மந்திரியாக இருந்துள்ளேன்.

இதற்கு பா.ஜனதா தான் காரணம். கட்சி மீது எந்த அதிருப்தியும் எனக்கு இல்லை. கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்த தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்ப்பேன். நாடாளுமன்ற தேர்தலிலும் கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராக தொடர்ந்து உழைப்பேன். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் விஜயேந்திரா மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்த வேண்டும். அவர் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்