வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு: தேவனஹள்ளி தாசில்தார் பணியிடை நீக்கம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தேவனஹள்ளி தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-09-12 18:45 GMT

தேவனஹள்ளி:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாசில்தாராக பணியாற்றி வந்தவர், சிவராஜ். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி லோக்-அயுக்தா போலீசார் அவரது வீடு, உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் சிவராஜ் வீடுகளில் இருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான ஆதாரங்களை லோக்-அயுக்தா போலீசார் கைப்பற்றிருந்தனர். இந்த சோதனை முடிவில் சிவராஜ் தனது வருமானத்திற்கு அதிகமாக 225 சதவீதம் சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய லோக்-அயுக்தா போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு கடந்த 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. மேலும் தேவனஹள்ளி தாசில்தாராக பாலகிருஷ்ணாவை நியமித்து அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதை எதிர்த்து சிவராஜ் கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். தான் இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற உள்ள நிலையில், பொய் புகாரின் பேரில் பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்கவும் கூறியிருந்தார். ஆனால் தடை விதிக்க கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் மறுத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சிவராஜை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. அதையடுத்து பாலகிருஷ்ணா புதியதாசில்தாராக பதவி ஏற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்