ரசாயன கழிவுகளால் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் யமுனா நதி
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் யமுனா நதியில் கலப்பதால், நதிநீர் மாசடைந்து வருகிறது.;
புதுடெல்லி,
யமுனா நதி இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பண்டிகை நாட்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் யமுனா நதியில் புனித நீராடுவதற்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த யமுனா நதியில் ரசாயன கழிவுகள் கலப்பதால், நதிநீர் மாசடைந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கள் யமுனா நதி முழுவதுமாக தூய்மைப்படுத்தப்படும் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் யமுனா நதியில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலப்பதால், வெள்ளை நிறத்திலான நுரை பொங்கி வழிகிறது. இது பார்ப்பதற்கு பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனை பொருட்பத்தாமல் நதியில் சிலர் குளிப்பதால், தோல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.