உடலில் காயங்கள்; 3 வயது குழந்தையை வீட்டு சிறையில் வைத்து அடித்து, உதைத்த கொடூர தாய்
பெங்களூருவில் 3 வயது குழந்தையை வீட்டில் சிறை வைத்து கொடூரமாக தாயே தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் 3 வயது குழந்தையை வீட்டில் சிறை வைத்து கொடூரமாக தாயே தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனை தட்டிக் கேட்டதால் அந்த பெண், அக்கம் பக்கத்தில் வசிக்கும் பெண்களுடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு கிரிநகர் அருகே வீரபத்ரநகரில் வசித்து வருபவர் சாரின். இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சாரின் தனது கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது 3 வயது குழந்தையை வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து சாரின் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
அந்த குழந்தைக்கு சாப்பிடுவதற்கு உணவு கொடுக்காமலும், குழந்தையை அடித்து, உதைத்து கொடூரமாக தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு இருந்தன. சாரின் தனது குழந்தையை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வது பற்றி அக்கம்பக்கத்தில் வசிப்போருக்கும், மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தெரியவந்தது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று சாரின் வீட்டுக்கு சென்றார்கள். பின்னர் வீட்டுக்குள் ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 வயது குழந்தையை மீட்டார்கள். இதன் காரணமாக அப்பகுதி பெண்களுடன், சாரின் தகராறில் ஈடுபட்டார். முதலில் தனது குழந்தையை சித்ரவதை செய்யவில்லை என்று சாரின் கூறினார். மேலும் தனது குழந்தை பொய் சொல்வதாகவும் அவர் தெரிவித்தார். உடனே குழந்தையின் உடலில் இருந்த காயங்களை அவரிடம் காண்பித்தனர்.
அப்போது தான் இல்லையென்றாலும், குழந்தை நன்றாக வளர வேண்டும் என்பதால் அடித்து, தாக்கியதாக சாரின் கூறினார். சாரினுக்கும் சங்கர் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. கணவர் குடிபோதையில் சாரினை தாக்கி வந்ததால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனால் தான் வேலைக்கு செல்லும் போது குழந்தையை வீட்டின் ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்ததும், காலையில் இருந்து இரவு வரை வீட்டுக்குள்ளேயே உணவு எதுவும் இல்லாமல் குழந்தை தனியாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் தினமும் மதியம் தனது நண்பரை வீட்டுக்கு அனுப்பி குழந்தைக்கு உணவு வழங்கி வந்ததாகவும், மழலையர் பள்ளியில் குழந்தையை சேர்க்க இருப்பதாகவும் சாரின் கூறினார்.
அத்துடன் நியாயம் கேட்க வந்த பெண்களுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் கிரிநகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சாரினுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள். அதே நேரத்தில் குழந்தை நல பாதுகாப்பு அதிகாரி நாகவேணி அங்கு வந்து, குழந்தையை சரியாக பார்த்து கொள்வோம் என்று கூறினால் மட்டுமே ஒப்படைப்போம் என்றும், இல்லையெனில் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து விடுவோம் என்றும் சாரினிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், 3 வயது குழந்தை தனது தாயுடன் செல்வதற்கு மறுத்து விட்டது. இதையடுத்து, பாதுகாப்பு மையத்திற்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) சாரினுக்கு கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும், அதன்பிறகு தான் குழந்தையை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாகவேணி கூறியுள்ளார். இந்த நிலையில், சாரின் தவிர்த்து, அவரது நண்பரும் குழந்தையை தாக்கியது தெரியவந்துள்ளது. வீட்டுக்கு சாப்பாடு கொடுக்க வரும் போது, அந்த மாமா தன்னை குக்கரால் தாக்கியதாக அந்த 3 வயது குழந்தை தெரிவித்தது.
இதன்மூலம் தாய் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து குழந்தையை தாக்கியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வீரபத்ரநகரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்ற தாயே குழந்தையை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்துள்ளார்.