உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு
தெலுங்கானாவில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறக்கப்பட்டது.
ஐதராபாத்,
இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது. ரூ.146.5 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலை மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தை தெலுங்கானா அரசு கட்டியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன. இதைத்தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று இந்த பிரமாண்ட சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை தெலுங்கானா முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார் அப்போது ஹெலிகாப்டர் மூலம் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன. அம்பேத்கர் சிலை திறப்பு விழாவையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
11.4 ஏக்கரில் ரூ 146 கோடியில் 360 டன் ஸ்டெயின்ஸ் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் நாடளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஹூசைன்சாகர் ஏரிக்கரையோரம் 50 அடி உயர பீடத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது.