'உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம்' - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 700 லட்சம் டன் சேமிப்பு திறன் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.;
புதுடெல்லி,
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டில் கூட்டுறவுத்துறையால் அமைக்கப்பட்டுள்ள 11 சேமிப்புக் கிடங்குகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இது உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த திட்டத்தின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது;-
"இன்று நமது விவசாயிகளுக்காக உலகின் மிகப்பெரிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும்.
நாட்டில் போதிய சேமிப்புக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. முந்தைய அரசுகள் இந்த பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தவில்லை. ஆனால் இன்று கூட்டுறவுத்துறை மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 700 லட்சம் டன் சேமிப்பு திறன் உருவாக்கப்படும். இந்த முயற்சிக்கு 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படும். அதிக சேமிப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைத்து, சந்தை விலைகள் லாபகரமாக இருக்கும்போது தங்கள் பொருட்களை விற்க முடியும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.