உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவர் - மீட்புக்குழு தகவல்
சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.;
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மற்றொரு குழாய் வழியாக அவர்களுக்கு திரவ உணவும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து விமானப் படையின் சி17 விமானம் மூலமாக ஏற்கனவே மற்றொரு துளையிடும் இயந்திரமும் சில்க்யாரா பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. துளையிட்டுக் கொண்டிருந்த நிலையில் இயந்திரத்தில் சத்தம் வந்ததால் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பிரதமரின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே வந்துள்ளார்.
அவர் கூறும்போது, மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இயந்திரம் மூலம் செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்களை மீட்க ஒரு திட்டம் மட்டுமல்லாமல் வேறு சில திட்டங்களையும் செயல்படுத்த நாங்கள் ஆலோசித்து வருகிறோம். மீட்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றார்.
சுரங்கப்பாதையில் சிக்கி உள்ளவர்களின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு அவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று தொழிலாளர்களில் ஒருவரின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.