அரசு பஸ் கண்டக்டருடன், தொழிலாளி வாக்குவாதம்

அரசு பஸ்சில் மனைவிக்கு டிக்கெட் எடுக்க மறுத்த தொழிலாளி, கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-05-27 21:10 GMT

கொப்பல்:-

டிக்கெட் எடுக்க மறுப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. முன்னதாக ஆட்சிக்கு வந்ததும், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி இருந்தது. இந்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்று ஒரு வார காலம் ஆன நிலையிலும் வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மின் கட்டணம் செலுத்த மாட்டோம் எனவும், இலவசமாக பஸ்களில் செல்வோம் எனவும் பலரும் அரசு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஸ்சில் சென்றபோது, தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு டிக்கெட் எடுக்க முடியாது என கூறி கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கொப்பலில் நடந்துள்ளது. கொப்பல் மாவட்டம் கங்காவதியில் இருந்து அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது கண்டக்டரிடம் தொழிலாளி ஒருவர் தனக்கு மட்டும் டிக்கெட் எடுத்தார்.

வீடியோ வைரல்

ஆனால் அவர் தனது மனைவிக்கு டிக்கெட் எடுக்கவில்லை. இதுகுறித்து கண்டக்டர், அந்த தொழிலாளியிடம் கேட்டார். அப்போது காங்கிரஸ் தனது வாக்குறுதியில் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் என கூறி இருந்தது. அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறினார். இதனால் கண்டக்டருக்கும், தொழிலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்த மற்றொரு பயணி, தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. மின்கட்டணம் வசூலிக்க வந்த மின் ஊழியரை, வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அண்மையில் நடைபெற்றது. அந்த சம்பவம் பற்றிய பரபரப்பு ஓய்வதற்குள் இலவச வாக்குறுதியால் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்