ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் - ராகேஷ் திகாயத்
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
தறபோது தலைநகர் டெல்லிக்கு சென்று அடைந்துள்ள இந்த யாத்திரைக்கு, குளிர்காலத்தையொட்டி இடைவேளை விடப்பட்டுள்ளது. இடைவேளைக்கு பிறகு 3-ந் தேதி (நாளை) மீண்டும் தொடங்கும் நடைப்பயணம் உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது.
இதற்கிடையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாபில் நடைபெறும் நடைப்பயணத்தில் பங்கேற்க மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டிற்கு மேல் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற விவசாய சங்கங்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்களால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நடைப்பயணத்தில் நான் பங்கேற்க மாட்டேன். அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்க எந்த தடையும் இல்லை.
ஆனால், மாவட்ட தலைவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்க அனுமதியில்லை. எங்கள் அமைப்பு அரசியல் சார்பற்றது. பல்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் அமைப்பில் உள்ளனர். காங்கிரஸ் அரசு உள்பட அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.